போர் பாதித்த அனைவருக்கும் வீடு; வடக்கு உறுப்பினர்களிடம் மாவை!

போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும். அவர்கள் ஓய்வூதியர்களாக இருந்தாலும் சரி, அரசாங்க உத்தியோகத்தர்களாக இருந்தாலும் சரி. வீடு இல்லாதவர்களுக்கு நிச்சயம் வீட்டுத் திட்டம் வழங்கப்படும்.

– இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில் வீட்டுத் திட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் –

எமது பிரதேசத்தில் போரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். ஓய்வூதியர்கள் என்றாலும் சரி, அரச உத்தியோகத்தர்கள் என்றாலும் சரி வீடு சொந்தமாக இல்லாதவர்களுக்கு நிச்சயம் வீடுகள் வழங்கப்படும்.

ஒரு குடும்பத்துக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு பிள்ளைகள் திருமணமாகினால், பிள்ளைகளுக்கு வீடு இல்லாவிட்டால் அவர்களுக்கும் வீடு வழங்கவேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக எமது மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பது எமதும் அரச உத்தியோகத்தர்களினதும் கடமையாகும்.

அரச உத்தியோகத்தர்கள் – அது உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி – அலுவலகத்தில் இருந்து பணியாற்றாது, வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்ற இடங்களுக்குச் சென்று மக்களிடத்தில் சேவையாற்றவேண்டும்.

வீட்டுத் திட்டம் வழங்கமுடியாது என்று சொல்வதற்கு எந்த உத்தியோகத்தருக்கும் அருகதை கிடையாது. பிரதேசசபை உறுப்பினர்களாகிய நீங்கள் உங்கள் பிரதேசத்தில் யாராவது வீடு இல்லாமல் கஷ்டப்பட்டால் அவர்கள் தொடர்பான தரவுகளைப் பெற்று என்னிடம் தாருங்கள். காணி இல்லாதவர்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுக்கும் வீட்டுத் திட்டம் கிடைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்கமுடியும்.

வீட்டுத் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பின் – யாராவது வீட்டுத் திட்டம் கிடைப்பதில் புறக்கணிக்கப்பட்டிருப்பின் – அவர்கள் தொடர்பான விவரத்தை நீங்கள் என்னிடம் தந்தால், சகல பிரதேச கிராம அலுவலர்களையும், பிரதமரின் அமைச்சுச் செயலாளர் சிவஞானசோதி, மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர் என அனைவரையும் அழைத்து, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம். எமது பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்