இராணுவம் மறுப்பவைகளையே நாம் கேட்கின்றோம்! – மாவை

இராணுவம் எந்தக் காணிகளைக் குறிப்பாக விட மறுக்கின்றதோ அந்தக் காணிகளையே நாம் முன்னிறுத்தி கேட்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில் வலி.வடக்கில் மக்களினது சகல காணிகளும் விடுவிக்கப்படவேண்டும். எனக்குப் பாகுபாடு கிடையாது. நான் எனது காணி விடுவிக்கப்படவேண்டும் என்றில்லாது சகல மக்கள் சார்பிலும்தான் 2003 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து காணி விடுவிப்புக்கு எதிராக சட்டரீதியாக கனக ஈஸ்வரன், சுமந்திரன் மூலம் வாதாடி வெற்றி பெற்றேன்.

– இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா.

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. அதில் பலாலி மேற்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஜெயரத்தினம், தமது பலாலி மேற்கு தொடர்பில் நீங்கள் எங்கும் எதுவும் பேசுகின்றமை கிடையாது. நீங்கள் பலாலி மேற்கை இராணுவத்துக்குப் பாரப்படுத்திவிட்டீர்களா? எமது பிரதேச மக்களும் உங்களுக்கு வாக்களித்தவர்கள்தானே! நீங்கள் எதற்காக எந்தக் கூட்டங்களிலும் பலாலி கிழக்கைப் பற்றியும், மயிலிட்டியைப் பற்றியும் மட்டும் பேசுகின்றீர்கள் என்றார். அவரது கருத்துக்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் –

சகல மக்களும் எனக்கு ஒன்றுதான். காணிவிடுவிப்பு தொடர்பாக பல போராட்டங்களை நடத்தியவன் நான். எமது மக்களுக்காக நான் சிந்திய வியர்வைக்கு தற்போது இங்குள்ள எவருக்கும் தகுதி கிடையாது. காணி விடுவிப்பு தொடர்பில் நானே பிரதான மனுதாரராகி உயர்நீதிமன்றத்தில் சுமந்திரன் கனக ஈஸ்வரன் ஊடாக மனுத்தாக்கல் 2003 இல் செய்தேன். எனது காணி விடுவிக்கப்பட்டதும் எதிர்தரப்பு சட்டவாளர் என்னை வழங்கை வாபஸ் வாங்கும்படி கூறினார். அதற்கு சுமந்திரன் தெரிவித்தார் அவர் மக்கள் பிரதிநிதி. அந்தப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். வலி.வடக்கு மக்களின் இறுதித் துண்டுக் காணி விடுவிக்கும்வரை இந்த வழக்கு தொடரும் என்றார். இன்றுவரை அந்த வழக்கின் தீர்ப்புக்கு அமையவே காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

பலாலி கிழக்கை விடுவிக்கவேண்டும் என்று நான் கூட்டங்களில் கருத்துத் தெரிவிக்கின்றமைக்கும் காரணம் உண்டு. உங்கள் பிரதேசம் – பலாலி மேற்கு – வெறும் பயிர்ச்செய்கை மட்டுமே நடைபெறுகின்ற பிரதேசம். ஆனால், பலாலி கிழக்கில்தான் இராணுவத்தின் மையப் பகுதிகள் உள்ளன. மிகவும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். இராணுவம் அந்தப் பிரதேசத்தை தமது இராணுவ முகாமுக்குரிய பிரதேசமாக மாற்றி பலப்படுத்த முனைகின்றது. அந்தப் பிரதேசத்தைத்தானே என்னால் முதல் கேட்கமுடியும்.

அண்மையில் கீரிமலையில் சுற்றுலாத்துறைக்கென தனியார் காணியை சுவீகரிக்க வந்தார்கள். நான் உடனே அங்கே சென்று அதைத் தடுத்தேன். அதுதொடர்பில் பிரதமர், காணி அமைச்சர், காணி ஆணையாளர்களுடன் பேசினேன். அந்தநேரத்தில் அது முக்கியத்துவம் பெற்றது.

மயிலிட்டியில் இறங்குதுறைக்கான வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு அங்கு பிரதான ஒரு பிரதேசமாக அந்த இடம் மாறவிருக்கின்றது. அந்த அடிக்கல் நாட்டும் கூட்டத்தில் என்றாலும் சரி, பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் வந்து ஆரம்பித்த நிகழ்வில் என்றாலும் சரி அந்தப் பிரதேசத்தில் பெரிய துறைமுகம் அமைக்கப்பட்டு அது இயங்குகின்றபோது முதலில் அந்தப் பிரதேசத்துக்கு உரித்தான மக்கள் குடியமர்த்தப்படவேண்டும் என்பதே பிரதான விடயம். அதைத்தான் நான் ஜனாதிபதியிடத்திலும் என்றாலும் சரி பிரதமரிடத்தில் என்றாலும் சரி வலியுறுத்தினேன்.

எனக்கு எமது மக்கள் சகலரும் தமது சொந்த நிலங்களில் மீளக்குடியேறவேண்டும் மக்களின் அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படவேண்டும் என்பதைத் தவிர எந்தப் பாகுபாடும் கிடையாது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்