தமிழரசு தர்மரின் மறைவு; தர்மத்தின் மறைவே ஆகும்! கலாநிதி ஆறு.திருமுருகன்

ஈழத்தமிழர்களுடைய ஒப்பற்ற, உயர்ந்த மனிதனாகத் தன்னுடைய உயிர் பிரியும் வரை காவல் செய்த பெருந் தலைவனுக்கு சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வளாகத்தில் உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. தர்மர் இறந்தவுடன் அனைவரும் பேசிய வசணம் தர்மலிங்கம் இறக்கவில்லை; தர்மம் இறந்துவிட்டது என்று. அவ்வாறானதொரு உயர்ந்த அரசியல் தலைவர் அவர்.

– இவ்வாறு தெரிவித்தார்  சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும்,  சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள்  அதிபரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான  செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உடுவில், மானிப்பாய்த் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,  சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளருமான அமரர் வி. தர்மலிங்கத்தின் ஜனன நூற்றாண்டையொட்டி பெரும் உருவச்சிலை  ஸ்கந்தவரோதயக் கல்லூரி முன்றலில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு நீண்ட உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-  

கடந்த-1918 ஆம் ஆண்டு விஸ்வநாதர் தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாகப் பிறந்தவர் தர்மலிங்கம். அவரது ஐந்து வயது நிரம்பியவுடனேயே சேர் பொன்னம்பல இராமநாதன் குடும்பத்துடன் டாக்டர் பி. எஸ். சுப்பிரமணியத்துக்கு இருந்த தொடர்பு காரணமாக இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை சுன்னாகம் இராமநாதன்  கல்லூரியில் கற்றார். குதிரை வண்டியில் அனுப்பி  அந்தப் பாடசாலையில் ஒரு செல்லப் பிள்ளையாக இவர் கல்வி கற்று வந்தார்.

யாழ்ப்பாணத்தில் நாவலர் பெருமானின் சிந்தனைக்கமைய ஆங்கிலப் பாடசாலைகளைக் கிராமங்கள் தோறும் பெரும் கல்லூரிகளாக நிறுவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கமைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியை 1894 ஆம் ஆண்டு ஒரு குடும்பம் தங்களுடைய நிதியில் உருவாக்கினார்கள். அவர் தான் கந்தையா உபாத்தியாயர். கந்தையா உபாத்தியாயரின் குடும்ப உறுப்பினர்களில் வாரிசாகவிருந்தவர்களில் ஒருவர் தான் அமரர் வி. தர்மலிங்கம். அந்தக் குடும்பத்தின் ஏக புதல்வனாகத் திகழ்ந்த தர்மலிங்கத்தை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். அவர் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர் ஆங்கிலத்தில் மேலும் கற்பதற்காக யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்குச் சென்றார்.

அந்தக் கல்லூரியில் உயர்தர வகுப்புக் கற்ற அவருக்கு இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதி கிடைத்தது. இலங்கை சட்டக் கல்லூரியில் அந்தக் காலத்தில் தமிழர்கள் உன்னதமாக கல்வி கற்று வந்தார்கள். அவ்வாறான கல்லூரியில் அவர் உன்னதமானதொரு மாணவனாக கல்வி கற்று வந்த போது ஒவ்வொரு வாரமும் அவரை யாழ்ப்பாணத்துக்கு அவரது குடும்பத்தவர்கள் அழைப்பார்களாம். இவர் ஒரு செல்லப் பிள்ளையாகவே விளங்கினார்.

தர்மலிங்கத்தின் 22 ஆவது வயதில் அவருடைய பெரிய தந்தையாராகிய பி. எஸ். சுப்பிரமணியத்தை இந்த உடுவில் கிராமசபையின் பொறுப்பை ஏற்குமாறு கேட்ட போது எனக்கு மருத்துவம் தான் தெரியும் எனவும், தர்மலிங்கம் அனைத்து நூல்களையும் படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு சோசலிஸ கம்யூனிஸப் பார்வையிலும் காணப்படுகிறார். அவரைக் கேட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாராம்.

சென்பற்றிக்ஸ் கல்லூரியில் படிக்கின்ற போது ரஷ்யக் கம்யூனிஸக் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடைய பிரசுரங்களையெல்லாம் வீட்டிற்கு கொண்டு வந்து படிக்கின்ற காட்சிகளைக் கண்டு இவர் எதிர்காலத்தில் அரசியல் பாதையிலேயே செல்லப் போகிறார் என்பதை அவரது குடும்பத்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
மிக இளம் வயதிலேயே உடுவில் கிராம சபையின் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறந்த முன்னுதாரணமாக அமரர் தர்மலிங்கம் திகழ்ந்தார்.

அந்தக் காலகட்டத்தில் மிகுந்த சாதிக் கட்டுப்பாடுகள் காணப்பட்ட நிலையில் அதனை உடைத்தெறியும் பண்பாட்டாளராகத் தர்மலிங்கம்  திகழ்ந்தார்.

அவரொரு கிராமசபைத் தலைவராகவிருந்த காலகட்டத்திலும் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த காலகட்டத்திலும் சாதாரணமானதொரு தேநீர்க் கடைக்குச் சென்று தேநீர் வாங்கி அங்கு நிற்பவர்களுடன் சேர்ந்து தானும் நின்றபடி தேநீர் அருந்துவார். இந்தக் காட்சியை நான் என் கண்களூடாக நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மருதனார்மடம் சந்தியிலுள்ள கடையில் அல்லது ஐயர் கடையில் அல்லது சுன்னாகம் சந்தியிலிருந்த கடையிலிருந்து தேநீர் குடிப்பார். அப்போது தகரத்தால் செய்த மூக்குப் பேணியில் சந்தைக்கு வருகின்ற சாதாரண மக்களுடன் சேர்ந்து தானும் தேநீர் குடிப்பார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிகவும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்ததொருவர் இவ்வாறான எளிய வாழ்க்கை வாழ்ந்தமை பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. மக்களது ஆதரவு அவருக்குப் பெருகியது.

1960  ஆம் ஆண்டு மிக இளம் வயதில் தர்மலிங்கம் தேர்தலில் போட்டியிட்ட போது மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். அந்தக் காலத்தில் தர்மலிங்கத்தை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டவர் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய கல்விமானாகத் திகழ்ந்த ஹன்றிக் பேரின்பநாயகம். கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராகவும், இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கி மகாத்மாகாந்தியை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தவர்களில் முதன்மையானவராகவும் இவர் திகழ்கிறார்.

மிகப் பெரிய கல்விமானாகத் திகழ்ந்த ஹன்றிக் பேரின்பநாயகத்துடன் மிக இளம் வயதான வி. தர்மலிங்கம் தேர்தலில் போட்டியிடுகிறார்.இவர் தேர்தலில் தோற்கத்தான் போகிறாரென கற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். கொழும்பிலிருந்து வெளியாகிய ஏரிக்கரைப் பத்திரிகையில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டது. அதில் இலங்கை முழுவதும் தெரிந்த ஒருவருக்கு எதிராக ஒரு இளைஞன் தேர்தலில் போட்டியிடுகிறான் எனக் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் குறித்த தேர்தலில் தர்மலிங்கம் மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றார். இவ்வாறான வெற்றியைப் பெற்றவுடனேயே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹன்றிக் பேரின்பநாயகத்தின் வீட்டிற்குச் சென்று உங்களுடைய ஒத்துழைப்பும், ஆசிர்வாதமும் எனக்குத் தொடர்ந்தும் தேவையெனக் கூறினார். இதனைக் கேட்டுக் ஹன்றிக் பேரின்பநாயகம் கண்கலங்கினார். தர்மலிங்கத்தின் இத்தகைய செயற்பாட்டைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

1960 களில் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்த பத்திரிகைகளை எடுத்துப் படித்துப் பார்த்தீர்களானால் இன்று சிலை வடிவில் காட்சியளிக்கின்ற தர்மலிங்கத்தின் உயர்ந்த பண்புகள் தெரியும்.

அவருடைய தந்தையார் விஸ்வநாதர். அமெரிக்காவிற்குச் சென்று எம்.ஏ பட்டம் பெற்றார். தர்மலிங்கத்தையும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும்  வெளிநாடுகளுக்கு அனுப்பிக் கல்வி கற்பிக்க வேண்டுமென அவரது பெற்றோர்கள் கனவு கண்டார்கள். ஆனால், அவர் மிக இளம் வயதிலேயே அரசியலில் புகுந்த காரணத்தால் சட்டக் கல்லூரியையும் விட்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் சாதாரணதொரு மனிதராக நடமாடினார். அனைத்து வயல்களுக்கும், தோட்டங்களுக்குள்ளும் செல்வார். தனக்குத் தெரிந்த அனைவரினதும் மரணச் சடங்குகளிலும் தவறாது கலந்து கொள்வார். இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்கின்ற போது சுடலை வரை இவர் நடந்தே செல்வார்.

இவர் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்னர் சுன்னாகம் ரயில் நிலையத்திற்கு அண்மையிலுள்ள சுடலையில் ஏழையொருவனின் மரணச் சடங்கிற்கு நடந்து சென்றுவிட்டு வந்து தெருவிலே நின்று பிளேன் சோடா வாங்கிப் பக்கத்திலிருந்தவர்களுக்குப் பங்கிட்டார். 1985 ஆம் ஆண்டு அவரது மரணத்தின் போது மக்கள் சொல்லியழுத செய்தி இது .

இவ்வாறான பெருந்தகை இன்று எங்கள் மத்தியில் இல்லாவிட்டாலும், குருதி சிந்தி அவரது உயிர் போனாலும் தேர்தலில் நின்ற ஒவ்வொரு தடவையும் அவர் வெற்றிவாகை சூடினார்.

ஒருமுறை அவர் தேர்தலில் நிற்கும் போது இந்தப் பாடசாலையில் ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைப் போதித்துக் கொண்டிருந்த கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த வி. பொன்னம்பலம், மாதகல் கந்தசாமி ஆகியோரும் தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். இதற்குப் பாடசாலையின் முகாமையாளர் அனுமதி வழங்க வேண்டும். தர்மலிங்கம் ஐயாவிற்கு எதிராகவே அவர்கள் தேர்தலில் நின்றார்கள். தேர்தலுக்கான அனுமதியை இந்தப் பாடசாலையின் முகாமையாளர் வழங்க வேண்டும். என்ன செய்யப் போகிறார்? ஏசிக் கலைக்கிறாரோ அல்லது இன்றுடன் எங்களது உத்தியோகமும் பறிபோகிறதோ தெரியவில்லை என்ற அச்சத்துடன் தர்மலிங்கம் ஐயாவிடம் செல்கிறார்கள்.

அங்கு தர்மலிங்கம் ஐயா வி. பொன்னம்பலத்தின் கைகளைக் குலுக்கி நீங்கள் சிறந்ததொரு அறிஞர், அரசியல்வாதி. நீங்களும் வெல்ல வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன். உங்களுக்கு என்ன உதவி நான் செய்ய வேண்டுமெனக் கேட்கிறார். அனுமதி பெறுவதற்காக வேறு மனநிலையில் சென்ற வி. பொன்னம்பலத்தில் மிகப் பெரிய மாற்றம்.
தர்மலிங்கம் இறந்த பின்னர் கூட கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தலைவன் பத்திரிகையில் நான் கண்ணீருடன் தான் தர்மலிங்கம் ஐயாவைப் பற்றி எழுதுகின்றேன் என உன்னதமானதொரு கட்டுரையை எழுதியுள்ளார்.

தனது சொந்தப பள்ளிக்கூடத்தில் தனக்கு கீழ் வேலை செய்கின்றதொரு ஆசிரியர்கள் தனக்கு எதிராக தேர்தலில் நிற்கின்ற போது அவரை வாழ்த்திக் கைகுலுக்கி வணக்கம் செலுத்தி உங்களுக்குத் தேர்தலில் நான் என்ன உதவி செய்ய வேண்டுமெனக் கேட்ட வார்த்தை என்னை நெகிழச் செய்தது. நான் தோல்வியடைந்தேன். நான் தோல்வியடைந்த பின்னர் முதல் செய்த வேலை தர்மலிங்கம் எம்.பிக்கு ஆங்கிலத்தில் சரளமானதொரு வாழ்த்துக் கடிதம் எழுதினேன். அதில் மனிதரில் ஒரு புனிதரென எழுதினேன் என வி. பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத விடயம். அவரையொரு அரசியல்வாதியாக மட்டும் நாங்கள் பார்க்க முடியாது. மனிதநேயமுடையதொரு மனிதர்.

கூப்பன் எடுக்கப் பணமில்லையே எனத் தெருவில் மறித்துக் கேட்பார்கள். அந்தக் காலத்தில் பத்து ரூபா பெரிய பணம். பத்து ரூபாத் தாள் கட்டாக அவருடைய பொக்கற்றில் இருக்குமாம். அதனை ஏழைகளுக்கு எடுத்துக் கொடுப்பார். வீட்டில் எந்நேரமும் நெல் அதிகளவில் காணப்படும். பசியுடன் யாராவது வந்தால் அவரது பாரியார் சித்தம்மாவிடம் நெல் கொடுத்து அனுப்புமாறு கூறுவார். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைக் கூப்பிட்டு மாம்பழம் கொடுப்பார்.

தர்மலிங்கம் ஒரு வித்தியாசமான மனிதர். ஒருநாளும் தானொரு பெரிய நாடாளுமன்ற உறுப்பினரெனக் காரின் பின்னாலிருந்து கையை நீட்டிக் கொண்டு போனது கிடையாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உருவச்சிலை அமைப்புக்கு கந்தரோடையைச் சேர்ந்த அமரர் லயன் மகாதேவா அவர்களின் புதல்வன் லண்டனைச் சேர்ந்த லயன் ம.பிருதுவிராஜா அவர்கள் ஒரு லட்சம் ரூபாவும் ஏனைய நிதியை ஸ்கந்தா பழையமாணவர்களிடம் இருந்தும் பெற்றே அமைத்துள்ளனர்.

ஸ்கந்தவரோதயக் கல்லூரி முதல்வர் லயன் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இமானுவல் ஆர்னோர்ல்ட், நகரசபைகள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கல்லூரிப் பழைய மாணவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்