அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்தின் கண்களுக்கு தெரியவில்லையா? – நாமல் கேள்வி

இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக கவலை தெரிவிக்கும் சர்வதேசம் ஏன் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இன்னும் எதுவும் கூறவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லெட் ஆகியோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) டுவிட்டரில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “புதிய இராணுவத் தளபதி நியமனம் குறித்து சர்வதேச சமூகம் கவலை தெரிவிக்கின்றது.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேர்தல்களைத் தாமதப்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் குறைந்தபட்ச தேவைக்குத் தடையாக இருக்கும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் இன்னும் எதுவும் கூறவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவுக்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.

அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்