கோட்டாக்கு டக்ளஸ் ஆதரவாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (திங்கட்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் கோட்டாவுடனான சந்திப்பு நம்பிக்கையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு ஆட்சி இங்கு வந்தாலும் அவர்களுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைப்பதே தமது ஆழமான இலட்சிய அரசியல் விருப்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இன மக்களும் ஏற்றுக்கொண்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அபிவிருத்தி திட்டங்கள், வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல், காணாமல்போன உறவுகளுக்கு தீர்வு, அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி, மக்களின் காணி நிலங்களை விடுவிப்பது போன்ற மக்களின் அபிலாசைகள் குறித்து கோட்டாபயவுடன் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களில் கோட்டாபய ராஜபக்ஷ தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கை தரும் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதையும் சாதிக்க முடிந்த, வல்லமை படைத்த, உறுதியானதொரு நாட்டின் தலைவர் மூலமே தமிழ் மக்களின் வரலாற்றிலும் நாம் மாற்றங்களை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கருணா அம்மன் என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் கோட்டாபயவிற்கு ஆதரவு தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்