முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவி உயர்வு

முன்னாள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கு இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் லெப்டினட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆனால், அவரின் பதவி உயர்வுக்கு, அமெரிக்கா மிகுந்த கவலையடைவதாக  இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம்தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் நேற்று (திங்கட்கிழமை) வௌியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புக்களினாலும் அவருக்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமாக காணப்படும் இந்தத் தருணத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் நன்மதிப்பையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாடுகளை வலிமையற்றதாக்கியுள்ளதாகவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்