சவேந்திர சில்வாவின் பதவி பீதியை ஏற்படுத்தும் – யஸ்மின் சூக்கா!

சவேந்திர சில்வாவின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அவரை இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே ஜனாதிபதி அவரை
புதிய இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்.

இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சவேந்திர சில்வா சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் அவரின் விருப்பத்தை காண்பித்த மனிதரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும் என்றும் யஸ்மின் சூக்கா மேலும் தெரிவித்துள்ளார்.

80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது, அதனை அடக்குவதில் அவரின் வகிபாகம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலக்கட்டத்தில் மரணதண்டனைகள், காணமாலாக்கப்படுதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்துவைப்பு போன்றவை தொடர்பான நம்பகரமான குற்றச்சாட்டுக்கள் இருந்தன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு அமெரிக்கா மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என உள்ளநாட்டு மற்றும் சர்வதேச தரப்புகளும்  எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்