ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் சஜித் பிரேமதாசவே எமது தெரிவு – அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி

இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவராகவும் இந்த நாட்டை அபிவிருத்தி நிறைந்த சுபீட்சமுள்ள நாடாக மாற்றக்கூடிய செயற்றிறன்மிக்க தலைவராகவும் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய கண்ணியம் மிக்க தலைவராகவும் நாம் சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டுள்ளோம்.

இத்தகைய ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அப்போது தான் எமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் உதயமாகுமென அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்பீடக் கூட்டம் கல்முனையில் இடம்பெற்றபோது அக்கட்சியின் தலைவர் எஸ். லோகநாதன் குறிப்பிட்டார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக அங்கு அவர் மேலும் பேசுகையில்;

இலங்கையில் சுதந்திரத்திற்காக அயராது உழைத்த கட்சியாகவும் முதலாவது பிரதமரைத் தேர்ந்தெடுத்த கட்சியாகவும் எல்லா இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாகவும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.

இக்கட்சியின் தலைவராக இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவைத் தேர்ந்தெடுத்த போது அதற்கு பரிபூரண ஆதரவை வழங்கிய ஒருவராக சஜித் பிரேமதாச இருந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாகிய ரணசிங்க பிரேமதாசவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி தந்தையின் வழியில் வறிய மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் காலடிக்குச் சென்று சேவையாற்றுகின்ற தலைவராக சஜித் பிரேமதாச உள்ளார்.

இத்தருணத்தில் பல சந்தர்ப்பங்களில் சஜித் பிரேமதாசவின் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். இதேவேளை, அண்மையில் அரசியல் நெருக்கடிநிலை ஏற்பட்டபோது, பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசவைக் கோரியபோது தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு பழம்பெரும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்து விடாமல் பாதுகாத்து இந்நாட்டில் ஜனநாய கத்தை மீண்டும் நிலைநாட்ட சஜித் பிரேமதாச உறுதியுடன் செயற்பட்டார்.

கொலைக் கலாசாரம், வெள்ளைவான் பீதி, ஊழல் மோசடிமிக்க ஆட்சி இவை போன்ற இன்னும் பல வெறுக்கத்தக்க விடயங்கள் இடம் பெறாமல் இருக்கவேண்டுமாயின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவுமிக்க தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் காலதாமதமின்றி அறிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவரின் வெற்றிக்கான பச்சைக் கொடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டவேண்டும். அப்போதுதான் மக்கள் எதிர் பார்க்கும் நல்லாட்சி மலரும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்