கோட்டா வென்றால் நாடு நாசமடையும்! – பொன்சேகா

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இந்தத் தேர்தலில் வெற்றியடைந்தால் அவரின் சர்வாதிகார ஆட்சியால் நாடு நாசமடையும். எனவே, நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவரைத் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளரையே ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்க வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தலைவர் மற்றும் கட்சிக் கொள்கைகள் இருக்கின்றன. அதற்கேற்ப வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.

எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி பொருத்தமற்ற நபரை வேட்பாளராக நியமித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

கோட்டாபய ராஜபக்ச நாட்டை ஆளக்கூடியவர் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனினும், அவர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளைக் கொண்டிருக்கின்றார். மிதக்கும் வாக்குகள்தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்