சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் எவையாக இருக்கும்? தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே,தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென அக்கட்சியினர் எதிர்வு கூறுகின்றனரே! எப்படி? அவ்வாறானால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதா? ஆராய்ந்தால் அறிவே அதிர்கிறது.
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 491835 வாக்குகளைப் பெற்ற கைசின்னத்திற்கு மும்முனைப் போட்டிகள் களமாடும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், தீர்மானிக்கும் சக்தியாக எப்படித் திகழ முடியும்? ஒரு வேளை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட இதன் சகோதரக் கட்சியான ஐ.ம.சு.கூட்டமைப்புக்கு (வெற்றிலை) கிடைத்த 989821 வாக்குகளையும் சேர்த்தால்14 இலட்சம் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமா? இவ்வளவு இடைவௌியிலா? இரு பிரதான கட்சிகளும் வாக்குகளைப் பெறப்போகின்றன.
எவரும் எதிர்வு கூறத்தயங்கும் இத் தேர்தலை என்னாலும் எதிர்வுகூற இயலாதுதான். எனினும் சில ஞாபகங்கள் மட்டும் களநிலவரங்களில் எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
 எஸ்.டபிள்யு.ஆர். டி. பண்டாரநாயக்க,டி.ஏ ராஜபக்ஷவின், சிந்தனையில் உதித்து அரசியல் வரலாறு படைத்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாரிசு இல்லாத அநாதையாகியதே எனது முதல் நினைவுகள். எதுவும் இயலாமலாகி கடையிசில்,வடமாகாண முன்னாள் முதலமைச்சரை, ஜனாதிபதி வேட்பாளராக, போட்டியிடுமாறு அழைக்குமளவுக்கு இக்கட்சி வறுமையாகியமை இரண்டாவது ஞாபகம். காட்டு வௌ்ளத்தில் அள்ளுண்டு சென்ற ஈசல்கள் போல, இக்கட்சியின் எம்பிக்களில் பெரும்பாலானோர். ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவுக்குச் சென்றமை மூன்றாவது ஞாபகம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இக்கட் சியின் வெற்றிக்காக,கட்சியின் தலைவரே (ஜனாதிபதி) பிரச்சாரம் செய்யாதமை நான்காவது ஞாபகம். தீர்மானிக்கும் சக்தியாகத் திகழவுள்ளதாகக் கூறப் படும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வேட்பாளர் வறு மையானமை ஏன்? இது எனது ஐந்தாவது ஞாபகம். இவ்வாறு ஞாபகங்கள் நீள்வதால், தீர்மானிக்கும் சக்தியாகத் திகழுமென்ற இக்கட்சியின் எதிர்வு கூறல்கள் ஏளனப்படுகின்றன.
முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனை வேட்பாளராக அழைத்ததில்,ஏதாவது அரசியல் வியூகம் இல்லாதிருக்காது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளைச் சிதைப்பதா இதன் நோக்கம்.? இந்தச் சிதைவுகளால் ஶ்ரீலங்கா பொது ஜனப்பெரமுனவை இருட்டுக்குள் பலப்படுத்துவதா திட்டம்.? இந்த இருட்டு நகர்வுகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தத் தலைமையில் தழைத்தோங்கியது.?
கடந்த 52 நாள் சட்டவிரோத அரசில் சஜித்பி ரேமதாஸாவை பிரதமராக்க முயன்றதும் பின்னர் இயலாமல் மஹிந்தவைப் பிரதமராக்கியதும் தீர்க்கதரிசனமில் லாத நகர்வுகளா?அல்லது கும்மாள அரசியலின் மேளதாள எதிரெலிகளா?இவ்வாறு சென்றால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தீர்மானிக்கும் சக்தியாக த் திகழ முடியுமா? இத்தனை சிந்தனைகளுக்குள்ளும் ஜனாதிபதி வேட் பாளருக்கான அழைப்பை நிராகரித்த விக்னேஸ்வரனின் பதில்களே என்னைப் புடம்போட்டன.
ஆக்கிரமிப்பு சக்திகளின் வலியை மறவாத எந்தச் சமூகத்தின் உரிமைப் போராட்டங்களும் மழுங்கடிக்கப்படாது என்பதையே விக்னேஸ்வரன் தனது மறுப்பில் உணர்த்தியிருந்தார். நேரடியாகவோ? மறைமுகமாகவோ தமிழர்களால், ஒருபோதும் ராஜபக்‌ஷக்களை ஆதரிக்க முடியாதென்ற விக்கியின் பதிலில் ஜனாதிபதியும் வியந்திருப்பார்.இந்த வியப்பும் விழிப்பும் முஸ்லிம் சமூகத்துக்கும் ஏற்பட வேண்டும்.
மொட்டுவை மறைமுகமாக ஆதரிக்கும் வியூகமே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அழைப்பென்பதில் விக்கிக்கு இரு பார்வைகள் இருக்கவில்லை. இந்த அனுபவங்களே தலைமைகளுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும் தேவை.வலிகளை எளிதில் மறக்கின்ற சமூகமாக நாம் இருக்கும் வரை, எமக்கான தனித்துவ யாத்திரைகளில் நாம் தடங்கல்களைச் சந்திக்கவே நேரிடும்.அன்று அடிபட்டு அல்லோலகல்லோலப்பட்ட முஸ்லிம் ஊரிலே இன்று ராஜபக்‌ஷக்களுக்கு ராஜகௌரவம் வழங்கப்படுவதை நினைத்தால்,சமூக உரிமைக ளும் சன்மானங்களுக்காக விலைபேசப்படுமோ? என்ற ஐயத்தையே அதிகரிக்கிறது. ராஜபக்‌ஷக்களின் காலத்தில் மட்டும்தான்,முஸ்லிம் சமூகத்துக்கு வலிகள் ஏற்படுத்தப்பட்டதென்பதும் என்றில்லை.
வலிக்கான அடித்தளங்கள் எவரது ஆட்சியில் இடப்பட்டதென்பதே மீள்பரிசீலிக்கப்பட வேண்டியது. எனவே எமது சமூகத்தில் பரீட்சிப்புக்கள் தொடரவேண்டி உள்ளது. எனினும் இன்றைய முகநூல் பதிவாளர்களின் பதிவுகள் ஒற்றைச்சிந்தனையை ஒட்டியதாக உள்ளதே பக்கச்சார்பு அரசியலுக்குப் பிழைப்பூட்டுகிறது.உண்மையில் மாற்றுச் சிந்தனைகளைப் பதிவிடுவதாக எவருமில்லாதமை முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைப்பஞ்சத்தையே காட்டுகிறது.
ராஜபக்‌ஷக்களும் இல்லாது,ரணிலுமில்லாது வேறு ஒரு சக்தியை உருவாக்க எத்தனிக்கப்படாதது ஏன்?
இன்னும் இதற்கு மேல் சிந்தனைகளின் வீச்செல்லைகளை விரிய விட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் சமூகத்துக்காக இயக்கப்படுவார்களா?அல்லது மைத்திரியின் மேளதாள ஓசைகளுக்குள் அள்ளுண்டு செல்வார்களா? பைஸர் முஸ்தபா, மஸ்தான், ஹிஸ்புல்லா, சுபைர், அஸாத்சாலி, நஜீப் ஏ மஜித்,ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு சமூகத்துக்காக எதைச் செய்யமுடியும்? ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான முஸ்லிம் சமூகத்தின் கொதிநிலை அரசியலைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இவர்களது பங்களிப்பை எமது சமூகம் மறப்பதற்கில்லை.எனினும் மைத்திரியின் எதிர்கால நகர்வுகள் எதுவாக இருந்தாலும் கூட்டோடு குடிபெயரும் இவர்களது கொள்கையை ஏற்க முடியாதென்பதே இன்றைய நிலைப்பாடு. அசாத் சாலியின் விதிவிலக்கு வரவேற்புக்குரியது.இவர்களையும் இந்த இருட்டிலிருந்து இவர்களின் விதி வெளியேற்றுமா என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு..
 ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள முஸ்லிம் எம்பிக்களுக்கும் இதே கட்டுண்ட நிலைப்பாடுகள் இருந்தாலும் சில வேளைகளில் இவர்களது குரல்கள்,கட்சித் தலைமையையும் மீறி சமுகத்துக்காக உயர்ந்து எழுவதைக் காணமுடிகின்றமை மகிழ்ச்சியே. இவ்விடயத்தில்தான் தனித்துவ கட்சிகளின் தாற்பரியங்களை சிறுபான்மைச் சமூகங்கள் உணரத் தலைப்படுகின்றன என்பதையும் ஏற்றேயாக வேண்டும்.
இத்தனைக்கும் ஜே.வி.பி நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தை அவதானிக்கும் போது ஆறு இலட்சம் வாக்குகளை 2015 நல்லாட்சி பெற்ற 61 இலட்சம் வாக்குகளிலிருந்து கழித்துப் பார்த்தால் தீர்மானிக்கும் சக்திகள் புலப்படலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்