எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார் சவேந்திர சில்வா!

இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

அவரின் நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில், அவர் இன்று (புதன்கிழமை) காலை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்திருந்தது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய தளபதிகளில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

குறிப்பாக யுத்த காலத்தில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய படையணி ஊடாகவே தமது உறவுகள் காணாமலாக்கப்பட்டார்களென காணாமல்போனோரின் உறவுகள் குற்றம் சாட்டியிருந்தன.

இவ்வாறான நிலையில் சவேந்திர சில்வாவை புதிய இராணுவத் தளபதியாக நியமித்தமைக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை, கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என உள்ளநாட்டு மற்றும் சர்வதேச தரப்புகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்