சவேந்திரசில்வாவின் கடைவாயில் இப்பவும் வடிகிறது தமிழர் இரத்தம்! நாடாளுமன்றில் சிறிதரன் சீற்றம்

கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கும் தமிழின படுகொலையாளியான சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையானது மிகவும் பயங்கரமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து தமிழ் மக்களின் வாக்குகளினால் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 20 ஆம் நூற்றாண்டில் கொலைகளுக்கு பெயர்போன சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நான் இந்த நாட்டில் மாற்றங்களைக்கொண்டு வருவேன். மீண்டும் ஜனாதிபதியாக ஆசைப்பட மாட்டேன் என்றெல்லாம் உறுதியளித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த, பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்த, இன்றும் இறுமாப்புடன் இன்னும் கொல்லுவேன் என்று சொல்கின்றவரை இராணுவத்தளபதியாக நியமித்துள்ளதன் மூலம் நாட்டில் இன்னொரு இனம் வாழ முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இரத்தம் குடித்த சவேந்திர சில்வாவின் கடைவாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையாளி இந்த நாட்டின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை மிகவும் அபாயகரமானது.

அத்துடன் நாட்டின் புலமைச்சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள பாடல்களை மாத்திரம் பாதுகாக்கும்வகையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அனைத்து இனங்களின் புலமைச்சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அப்போது நாங்களும் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்போம்.

ஆனால் தமிழ் வீரப்பாடல்களை யாராவது பாடினால் அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலையே இருந்து வருகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்