இம்முறை யாழ்விருது பாலசுந்தரம்பிள்ளைக்கு! வழங்கினார் ஆர்னோல்ட்

யாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ‘யாழ்.விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

“நல்லைக்குமரன் மலர்-2019 வெளியீட்டு விழா” நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை(19) முற்பகல்-09 மணி முதல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

யாழ். மாநகரசபையின் சைவசமய விவகாரக் குழுத் தலைவரும், யாழ். மாநகரசபையின் ஆணையாளருமான த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாநகரசபையின் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வாழ்நாட் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளைக்கான யாழ் விருதினை சம்பிரதாயபூர்வமாக வழங்கிக் கெளரவித்தார்.

தனது வாழ்க்கைத் துணைவியுடன் இணைந்து பொன். பாலசுந்தரம்பிள்ளை யாழ். விருதினைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, வருடாந்தம் யாழ். மாநகரசபை மற்றும் மாநகரசபை சைவசமய விவாகரக் குழுவினரால் நல்லூர்க் கந்தசுவாமி பெருந்திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ‘யாழ் விருது’ இம்முறை வாழ்நாட்பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலவேறு தரப்பினரும் வரவேற்பும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

யாழ் விருதினைப் பெற்றுக் கொண்ட பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளைக்கு எமது செய்தித் தளம் சார்பாகவும், எமது மக்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

இதேவேளை, யாழ். வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகி செ. மோகனதாஸின் சமய, சமூகப் பணிகளைப் பாராட்டிக் கடந்த 2018 ஆம் ஆண்டில் யாழ் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டதுடன், சமயப் பணிகளுடன் சமூகத்துடன் இணைந்த பல்வேறு பணிகளையும் செவ்வனே ஆற்றிவரும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கடந்த- 2017 ஆம் ஆண்டுக்கான யாழ் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்