கோட்டாவின் வாக்குரிமை குறித்து ஆராயுமாறு கோரிக்கை முன்வைப்பு

இலங்கை பிரஜையாக இல்லாதபோது 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாக்களித்தமை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தல்கள் ஆணையகத்திடம் முன்வைத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிங்கள ஊடகமொன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை பிரஜையாக இல்லாதபோது வாக்காளராக பதிவு செய்யப்பட்டு, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த சிங்கள ஊடகம் தேர்தல்கள் ஆணையகம் இது தொடர்பாக சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை தேர்தல்கள் ஆணையகம் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கோரிக்கை முன்வைக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்