அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும்

அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் சரத்பொன்சேகா அவர்கள் கோட்டபாய அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமையை வரவேற்றுள்ளார். இதை ஓரு இராணுவ ரீதியான கண்ணோட்டமாகவே பார்க்கிறேன். அவர் ஓரு பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தும் இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்கிறார். அதன் பின்புலத்தை அவர் உணரவில்லை.

நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றி பேசவேண்டியவர்கள் அனைத்தையும் கைவிட்டு சோமாலியா, தென்சூடான் போன்ற நாடுகளைப் போல் இந்த நாட்டை மாற்ற முயல்கிறார்கள். இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு என்ற வகையில் இவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் தமிழர் விரோத செயற்பாடுகளாகவே அமையும் என உணர முடிகிறது. தமிழர்கள் நிம்மதியாக வாழக் கூடிய ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் இன்னும் நகர தயாராகவில்லை. வறிய நாடான சிங்கப்பூர் இன்று பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட்டமையே அதற்கு காரணம்.

எனவே, இலங்கையிலும் அனைத்து இன, மத மக்களுக்கும் சமத்துவம் வழங்கி இன்னொரு அடக்குமுறையை திணிக்காத ஓரு ஆட்சியை நிலை நிறுத்தி பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஓருவரே ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் எனத்தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்