சவேந்திர சில்வாவுக்கு ஆதரவு வழங்கும் சஜித் பிரேமதாச தரப்பு

லெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகமும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால், நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு நோக்கி செல்லும் இலங்கையின் பயணம் சீர்குலையும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளை இராணுவ தளபதி பதவிக்கு சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை, மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பின்நோக்கி தள்ளுவதாக அமைந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளன.

இதனிடையே சவேந்திர சில்வாவின் நியமனம் சம்பந்தமான ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தரப்பின் பேச்சாளரான அமைச்சர் அஜித் பி. பெரேரா வாழ்த்து தெரிவித்திருந்தமை குறித்து சிவில் அமைப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இது சம்பந்தமான கருத்து வெளியிட்டுள்ள சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ரைட் டு லைஃப் என்ற மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பிலிப் திஸநாயக்க, போர் காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பாரதூரமான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சவேந்திர சில்வாவின் நியமனம் சம்பந்தமாக சஜித் பிரேமதாச தரப்பினர் மகிழ்ச்சியடைவார்கள் என்றால், அவர்களின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமை தொடர்பாக ஏற்படும் நிலைமை பற்றி எண்ணிப்பார்க்கக் கூட முடியாது என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்