பதவி விலகிய இரு முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர். பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கடந்த ஈஸ்டர் தாக்குதலையடுத்து அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலகக் கோரி, அத்துரலிய ரத்ன தேரர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நடத்தினார்.

அத்துடன் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அண்மையில் சில முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று இரு உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்றுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்