கோட்டா பழைய கஞ்சி: அநுர பழைய சாதம் – அமைச்சர் மனோவின் பேஸ்புக் பதிவு

இன்று கோட்டா பழைய கஞ்சியாகவும் அனுர பழைய சாதமாகவும் உள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன் தமது வேட்பாளரை அறிந்துகொள்ளவே நாடு விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு முழு நாட்டின் அவதானத்தையும் தமது பக்கம் திருப்பியுள்ளதாக மனோ குறிப்பிட்டுள்ளார்.

தொலைகாட்சி விவாத நிகழ்வில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவொன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முழு நாட்டின் அவதானத்தையும் எமது பக்கம் நாம் இன்று திருப்பியுள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால் அந்த அறிவிக்கும் வேளையை நாமே தீர்மானிப்போம்.

இம்முறை வேட்பாளரை பெயரிடும் சந்தர்ப்பத்தை நாம் விரும்பியே ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கி உள்ளோம்.

2010, 2015 வருடங்களில் வெளியில் இருந்து வேட்பாளர் வந்த காரணத்தால், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருந்து வேட்பாளர் வருவது மிகவும் நியாயமானது. இதை நானே முதலில் கூறினேன்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சி பெயரிடும் வேட்பாளரை நாம், ஜனநாயக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம்.

இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் அணி தலைவர்.

இங்கே அணி என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்குத் தேவை சட்டத்தின் ஆட்சியே.

குடும்பமா? கட்சியா? எங்கே ஜனநாயகம் உள்ளது என்பதை பொதுஜன பெரமுனவினர் தேடிப்பாருங்கள். அதற்காக ஒரே குடும்பத்தில் இருந்து பலர் அதே கட்சிக்கு உள்ளே வருவதை நான் மறுக்கவில்லை. தென்னாசியாவில் இது வழமை. உலகிலும் பல நாடுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் ஒரே கட்சியில் இருக்கிறார்கள்.

இந்த விடயமோ அல்லது வேட்பாளர் கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை பிரச்சினையையோ எமக்கு முக்கியமில்லை.

ஒரே குடும்பம் என்பதால்தான் உங்களால் தாமதமில்லாமல் வேட்பாளரை அறிவிக்க முடிந்தது. இதே காரணத்தால் தான் நாம் இன்னமும் எமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இது ஒரு ஜனநாயக தாமதம். இதை புரிந்துக்கொள்ளுங்கள்” என்று மனோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்