ராஜபக்ஷக்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி சஜித் பிரேமதாஸ: மாத்தறையில் மங்கள தெரிவிப்பு

ராஜபக்ஷக்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி, அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மங்கள மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் போட்டியிடுவார். ராஜபக்ஷக்களைத் தோற்கடிக்க அவராலேயே முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்தாமல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆசீர்வாதத்துடன் அவர் நிச்சயமாக வேட்பாளராக களமிறங்குவார்.

அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் தற்போது நிலவும் இந்த சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டப்படும்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிய அதனை சபாநாயகர் கரு ஜயசூரிய வழிமொழிவார் என்பதை நான் இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.

ராஜபக்ஷக்களின் போலிப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாறக்கூடாது. கடந்த நான்காண்டுகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருட்கள், சேவைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனை மக்கள் சிந்தித்தே அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்