பண்டார வன்னியனின் நினைவுதின நிகழ்விலிருந்து சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு தின நிகழ்வில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்துள்ளார்.

அத்தோடு ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் நிகழ்வா இதுவென்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பண்டார வன்னியனின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பண்டார வன்னியனின் கொடியினை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் ஏற்றி வைத்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றியிருந்தார்.

இந்நிலையில், நீண்டநேரமாக விருந்தினர் வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அமர்ந்திருந்தபோதும் அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அதனையடுத்து தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபன் என்பவரை அழைத்து தனக்கு உரையாற்ற 5 நிமிடம் வழங்குமாறு சாந்தி சிறிஸ்கந்தராஜா கோரியிருந்தார்.

எனினும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனை குறித்த உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் தெரிவித்ததையடுத்து, இது பண்டாரவன்னியன் நிகழ்வா? அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் நிகழ்வா என கேள்வி எழுப்பியபடி மண்டபத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நகரசபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வாக அமைந்துவிட்டதோ என தான் உணர்வதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்