தமிழ் மக்களின் ஆதரவுக்காக கூட்டமைப்பை சந்திக்க கங்கணம் கட்டும் வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனித்தனியே சந்திப்புக்களை நடத்தியுள்ளனர்.

அந்தவகையில் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தர்மலிங்கம் சித்தார்த்தனை சந்தித்து, தேர்தலில் போட்டியிட அவர் எடுத்த முடிவுகள் குறித்தும் தமிழ் மக்களின் மனநிலை குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

மேலும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் தனித்தனியே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியினரும் ஜனாதிபதி வேட்பாளர் என தன்னை தெரிவித்துக் கொள்ளும் சஜித் பிரேமதாசவும்கூட அண்மையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வடக்கு உட்பட பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.

குறிப்பாக வடக்கில் தனியார் நிலங்களை இராணுவம் ஆக்கிரமித்துக்கொள்வது மற்றும் பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் காணி விடயம் தொடர்பாக எதிர்வரும் 28 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மற்றொரு சந்திப்பை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் எமது ஆதவன் செய்தி சேவைக்கு கூறினார்.

இருப்பினும் தற்போது ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அக்கட்சியின் அறிவிப்பின் பின்னரும் வழங்கும் வாக்குறுதிகளை அடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்