ஐ.தே.க.வுக்குள் உள்ள குழப்பமே கோட்டாவை இலகுவாக வெற்றியடையச் செய்யும் – சுசில்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலவுகின்றமையினால் கோட்டாபய  ராஜபக்ஷ கடும் போட்டியில்லாமல் வெற்றியடைவாரென நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்

கடுவெல பகுதியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமைகள் குறித்து  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்கு தெரியும்.

ஆகையால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதா என்ற விடயத்தில் சரியான முடிவை அவர் எடுப்பார்.

அத்துடன் இலங்கையில் கலாசார ஆடை அணிபவரே சுதந்திரக்கட்சி வேட்பாளராக வருவார் என சிலர் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஆரம்பத்தில் ஐரோப்பிய ஆடைகளை அணிந்தார். பின்னர்  நாட்டுக்கு பொருந்தும் வகையில் இடத்திற்கு ஏற்ற வகையில் அவர் ஆடைகளை அணிந்தார்.

இதற்காக ஆடைகள் அணிவதனை வைத்து ஒருவரை மதிப்பிட முடியாது. கல்வி, செயற்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஒருவருடைய திறமையினை மதிப்பிட வேண்டும்.

இதேவேளை  வரலாற்றில் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளரை நிறுத்துவதில் பிரச்சினை தோன்றியுள்ளது.

இத்தகைய சூழ்நிலை அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்குமானால் கோட்டாபய, கடும் போட்டியில்லாமல் வெற்றியடைய முடியும்” என அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்