ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்துவிட்டதாக ரணில் அறிவிப்பு

தேசிய ஐக்கிய முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும் அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போகம்பர கலாசார நிலையத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தமது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒரு வேட்பாளரை தெரிவு செய்துள்ளோம் என்றும் சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதென்றும் எனவே, விரைவில் தேசிய ஐக்கிய முன்னணி உருவாக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் தமது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஜே.வி.பி. சார்பாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்