இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் அறிவர் – சவேந்திர சில்வா

இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “சர்வதேசத்தினர் போர்க்குற்றங்கள் தொடர்பாக தற்போது கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

எமது நாட்டுக்கென, சுயாதீனத் தன்மையொன்று இருக்கிறது. எனவே, எங்கள் மீது குற்றங்களை முன்வைக்கும் தரப்பினர், இதனை சிந்தித்து செயற்பட வேண்டும் என்றே நாம் கருதுகிறோம்.

நாம் நாட்டுக்கான சேவையைத்தான் செய்தோம். இதுதான் எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக இருக்கிறது.

இந்த நிலையில், என்னை இராணுவத்தளபதியாக நியமித்தமைக்காக நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில்தான் அவர் என்னை இந்தப் பதவியில் நியமித்தார். இதேபோல, எதிர்காலத்திலும் சவால்கள் மற்றும் அழுத்தங்கள் வரும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எவ்வாறாயினும், நான் இந்த நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யக்கூடத் தயாராகவே இருக்கிறேன்.

இராணுவம் தமிழர்களிடம் எவ்வாறாக செயற்பட்டது என்பதை தமிழர்கள் நன்றாக அறிவார்கள்.

இராணுவத்தின் உணவு, தண்ணீரைக் கொடுத்துதான் நாம் அவர்களை அப்போது பாதுகாத்தோம். எனவே, யார் எவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இராணுவத்தினர் தொடர்பாக அவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்