தமிழர் தாயகத்தில் தொடரும் அவலம்… காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தந்தை விபத்தில் மரணம்

இறுதிப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தந்தை ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகனைத் தேடியவரது மனைவியும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொழும்புக்குச் சென்றுவரும்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கணுக்கேணியைச் சேர்ந்த  பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் (வயது – 61) என்ற தந்தையே கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

திருஞானசம்பந்தர் வாசீசன் என்பவர் முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டார். அவரைத் தேடி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தாயும் தந்தையும் அலைந்து திரிந்ததுடன் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

மகன் காணாமல்போன வேதனையில் ஆழ்ந்த கவலையிலிருந்த தந்தையார் பொன்னுத்துரை திருஞானசம்பந்தர் மற்றுமொரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குச் சென்று வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 20ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியயலைந்த வவுனியா, ஓமந்தை, மகிழங்குளத்தைச் சேர்ந்த வேலாயுதம் செல்வராசா (வயது – 56) என்ற தந்தையும்  உயர் குருதி அழுத்தத்தால் உயிரிழந்திருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவுகள் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் உயிரிழப்பதையிட்டு வேதனை கொண்டுள்ள எஞ்சியிருக்கும் உறவுகள், இவற்றால் தமது போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்