ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படுமா இன்று?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இதன்போது புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பமான நிலை காணப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், கட்சியின் தலைமை இதுகுறித்து தொடர்ந்தும் அமைதி காத்து வருகின்றது. விரைவில் புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் குறித்த அறிவிப்பினை வெளியிடுமாறு கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இன்றைய தினம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்சியின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி, ரணிலிடம் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.

ஒரு வாரத்திற்குள் சஜித் பிரேமதாஸ வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், இதன்போது காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய நகர்வை ஆரம்பிக்க சஜித் அணி முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்