சஜித்துடன் மோதும் மூவர் – ஐ.தே.க.விற்குள் தொடர்ந்தும் குழப்பம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயருடன் மேலும் மூவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அத்தோடு இம்மாத இறுதிக்குள் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளிவராத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தற்போது அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கட்சிக்குள் ஒருசிலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனரென்றும் அது அவர்களின் ஜனநாயக உரிமையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எது எவ்வாறாயினும் இம்மாத இறுதிக்குள் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகுமென்றும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

மேலும் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த வினாவுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் அதிகமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும் அவரை தவிர்த்து மேலும் மூவரின் பெயர்கள் கட்சிக்குள் முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அவர்கள் ஊடகங்களில் தம்மை வேட்பாளராக கூறுகின்றதோடு, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோரது பெயர்களும் ஊடகங்களில் வருவதை அவதானிக்க முடிகிறதென்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் கட்சிக்கென்று ஒழுக்கம், நடைமுறைகள் உள்ளதென்றும் தனிநபர் எடுக்கும் தீர்மானம், கட்சியின் தீர்மானமாக அமையாதென்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் ஏற்படவில்லையென தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசீம், கட்சியை பிளவுபடுத்த இடமளிக்கப் போவதில்லையென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்