இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையில், இராணுவத்தின் புலனாய்வுத் திறனை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் புலனாய்வு துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் புலனாய்வுத்துறையின் தகவல்களின் அடிப்படையில்தான், தங்கள் படையினரை நிலைநிறுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.

நாடு எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க, இராணுவம் ஒரு வலுவான புலனாய்வுப் பிரிவைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவு அதன் பிரதான தரத்தில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தமது புலனாய்வுத்துறையின் ஆற்றல் எப்போதும் நன்றாக இருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அதேநேரம், தனது இராணுவத்தளபதி பதவிக்கு சர்வதேச தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என்பன சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிட்டார்.

மேலும், தங்கள் கவலைகளை வெளிப்படுத்தவும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றும் எவ்வாறாயினும், அதுகுறித்து தான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நாட்டின் தேவையை கருத்திற்கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராணுவத் தளபதியாக தன்னை நியமித்தார்.

அதற்கமைய நாட்டினது இறையாண்மையையும் மக்களையும் பாதுகாப்பதுதான், இராணுவத் தளபதியாக தனது முக்கிய அக்கறையாகும் என்றும் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எந்தப் பகுதியில் எத்தனை முகாம்கள் மற்றும் படையினரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து முப்படைகளுக்கு சிறந்த மதிப்பீடு உள்ளது.

புலனாய்வுத்துறை அறிக்கைகள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில், முகாம்களைக் குறைக்கலாமா அல்லது அதிகரிக்கலாமா என்பதை தீர்மானிப்போம்.

எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றவோ அல்லது குறைக்கவோ இராணுவத்திடம் எந்த திட்டமும் கிடையாது எனவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்