5 வருடங்களுக்கு பொருளாதாரத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – பிரதமர்

நாட்டினுள் விரைவான பொருளாதார வளர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் 5 வருடங்களுக்கு பொருளாதாரத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பயிற்சியற்ற பணியாளர்கள் இல்லை என்பதாலும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களால் அந்த நாடுகள் வேகமாக முன்னேற்றம் கண்டுள்ளன.

தொழில்நுட்பத்துறை ஆசிரியர்களுக்காக குளியாப்பிட்டியவில் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான பீடம், கல்வித்துறையை நவீனமயப்படுத்துவதற்கும் அதனூடாக பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதற்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

பயிற்சிபெற்ற பணியாளர்களை உருவாக்கும் ஒரு நடவடிக்கையாக கடந்த வாரம் இலங்கையில் மிகவும் விசாலமாக கைத்தொழில் பயிற்சி மத்திய நிலைமொன்று ஒருகொடவத்தையில் நிர்மாணிக்கப்பட்டது.

எதிர்வரும் வருடங்களில் இதுபோன்ற பல கைத்தொழில் பயிற்சிக் கூடங்களை அமைப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 3 தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையில் தேயிலை கொளுந்து பறிப்பதற்காக பயிற்சியற்ற தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்து வந்தார்கள்.

அதேபோன்று பயிற்சியற்ற பணியாளர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினோம். இன்னும் கூறப்போனால் ஆரம்ப காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பொருளாதார நிலை சற்று மந்தகதியிலேயே இருந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை மாறி அனைவரும் சிறந்த கல்வியையும் பொருளாதார பின்னணியையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தில் முடங்கியிருந்த நாட்டை கையேற்று சுயமான முன்னேற்றத்தை காணும் தேசத்தை கட்டியெழுப்பும் முயற்சிலேயே நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்