பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்

இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன்  ஆரம்பமான வருடாந்த மகோற்சவம், தொடர்ந்து 16 தினங்கள் நடைபெறவுள்ளதுடன் தினமும் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை, சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என்பனவும் நடைபெறவுள்ளன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெறும் வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை தேர் உற்சவம் நடைபெறவுள்ளது.

மறுதினம் நடைபெறவுள்ள தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்க உற்சவத்துடன் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறும்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மகோற்சவத்தையொட்டி நேற்று மாலை தொடக்கம் சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. இன்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து தேவநாத மேளம் முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றப்பட்டு மகோற்சவம் ஆரம்பமானது.

பாரம்பரிய நடைமுறைகளினைக்கொண்டு நடைபெறும் ஆலய கொடியேற்றத்தின்போது நெற்கதிர்கள் கொடிக்கயிறாக திரிக்கப்பட்டு கொடியேற்றம் செய்யப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

கல் நந்தி புல் உண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்