பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வறுமை கல்விக்கு தடையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் கல்வியின் மீதான ஆர்வமும், ஊக்கமும் இருந்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் வாழ்வில் உயர்வான நிலைக்கு வர முடியும். அத்துடன் ஒவ்வொரு மாணவரும் தமக்கு கல்வி புகட்டும் அதிபர் ஆசிரியர்களின் ஆசிர்வாதங்களைப் பெறக்கூடிய வகையில் பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவுதான் கல்வி அறிவில் மேலோங்கி இருந்தாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையேல் அவன் பெற்ற கல்வி பூச்சியமாகிவிடும்.

இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலயத்தின் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி எம்.இராஜேஸ்வரன், அவரது சகோதரர் எம்.உதயகுமார் ஆகியோர் தமது தந்தையாரின் பெயரில் இயங்கும் முருகேசு அறக்கட்டளை நிதியத்தின் மூலம் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான பேன்ட் வாத்திய சீருடைகளை 04.09.2019 ஆந் திகதி இப்பாடசாலை அதிபர் ச.சபாரெத்தினத்திடம் கையளித்தனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், சமூக சேவையாளர் க.கனகராஜா, திருமதி.இராசமாணிக்கம் முருகேசு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அங்கு எம்.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்,

நாம் கல்வி கற்ற காலத்தில் இலவச பாடநூல் இல்லை, இலவச சீருடை இல்லை, இலவச மதிய உணவு இல்லை, கற்பிப்பதற்கு  போதிய ஆசிரியர்கள் இருக்கவில்லை, தளபாடங்கள் இன்மையினால் தரையிலும் மர நிழலிலும் இருந்து கல்வி கற்றோம். இந்த வகையில் நீங்கள் பாக்கியவான்கள். அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல வேண்டியவர்கள்.

இன்று எனது தந்தையாரின் ஞாபகார்த்தமாக பேன்ட் வாத்திய அணிக்கான சீருடையினை வழங்கி வைக்கின்றேன். எதிர்காலத்தில் என்னைப் போன்று இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் பாடசாலைகளுக்கும், ஆலயங்களுக்கும், வறிய மக்களுக்கும் உதவுபவர்களாக வர வேண்டும். அவ்வாறு வரவேண்டுமாயின் நீங்கள் கவனமாகப் படித்து ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழ்ந்து ஊரும் உலகும் விரும்பும் தலைவர்களாக வரவேண்டும் என்பதை எனது ஆசையாகும் என்று குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்