அமைச்சர் றிசாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் உள்ளக வீதி அமைப்பு

அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் 2 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீட்டின் மூலம் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் உள்ளக வீதி அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் உள்ளக வீதிகள் நீண்டகாலமாக திருத்தப்படாது குன்றும், குழியுமாக மண் வீதியாக காணப்பட்டது. இதனை திருத்தி புதிதாக தார் வீதி அமைத்து தருமாறு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினரால் தொடர்ச்சியாக கோரப்பட்டு வந்தது.

இந்நிலையில் சாலை முகாமையாளர் எச்.சாஹீர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களினால் குறித்த சாலையின் உள்ளக வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைக்காக 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

குறித்த நிதியின் கீழ் சாலையின் உள்ளக வீதி புனரமைப்பு மற்றும் வீதி நிர்மாண நடவடிக்கையை அமைச்சரின் வவுனியா நகர இணைப்பாளரும், நகரசபை உறுப்பினருமான அப்துல்பாரி மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் ஆர்.எம். லரீப் ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் சாலை முகாமையாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சாரதிகள், நடத்துனர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

<

/p>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்