ஒருமித்த நாட்டுக்குள்ளேயே அதிகூடிய அதிகாரப் பகிர்வு – 2015ஆம் ஆண்டுக் கதையை மீண்டும் கூறிய அமைச்சர் சஜித்

ஒருமித்த நாட்டுக்குள் அதிகூடிய அதிகாரங்களைப் பகிர்ந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன்” என்று தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, “ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அதை இலகுவாக வழங்குவேன்” என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ வடக்குக்குப் பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். அவர் வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும்போது அபிவிருத்தி பற்றியும், வீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படுவது தொடர்பாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தானே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று அறிவித்துள்ள அவர், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினை தொடர்பாக வடக்கில் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்திருந்தார். தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அவரது நிலைப்பாடு என்ன என்று வினவியபோதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஒருமித்த இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதே எனது நோக்கம். அதற்காக நான் பாடுபடுவேன். அதிகூடிய அதிகாரங்களை வழங்குவேன்” என்று அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று கூட்டு அரசு ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டு, அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் அவ்வாறே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்