சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக கைதான சந்தேகநபருக்கு மீண்டும் 7 நாட்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைதுசெய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்து இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் பொலிஸார் மேலும் ஒருவாரம் மேலதிக விளக்கமறியலை கோரியதற்கு இணங்க நீதிவான் அனுமதி வழங்கினார்.

மேலும் எதிர்வரும் செப்ரம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் தரப்பினர் முன்னெடுப்பதுடன் சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பினரின் வழக்கினை பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுத்தார்.

இதுதவிர குறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபதுடன் இரு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள பாண்டிருப்பு-2 பகுதியில் வசிக்கும் தில்லைநாதன் ஆனந்தராஜ் (வயது-41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கைதுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்