எழுக தமிழ் அன்று கடையடைப்பு :வவுனியா வர்த்தக சங்கம் எதிர்ப்பு!

சி திவியா

எழுக தமிழ் நிகழ்வுக்காக மக்களின் இயல்புவாழ்க்கையைப் பாதிக்கும்படி – கடைகளை மூடும்படி – அழைப்பு விடுத்துள்ள கோரிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். அரசியல்சார்ந்த ஒரு நிகழ்வுக்காக மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது.

– இவ்வாறு வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

எழுக தமிழ்’ நிகழ்வு சிறப்புடன் நடைபெற வாழ்த்துகின்றோம். ஆனால் ‘எழுக தமிழ்’ நிகழ்வை முன்னிறுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாதவகையில் செயற்படவேண்டும். யாழ் நகரில் நடைபெறும் கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டுமாறு கோரிக்கை விடுவது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம். வர்த்தகர்கள் பல வழிகளில் பல சிரமங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை யாரும் புரிந்துகொள்பவரல்லர்.

கடையடைப்பு செய்வதால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சிரமப்படவேண்டிய நிலை ஏற்படும். ‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு சகல மக்களும் உணவுடன் வருகை தந்து கலந்து கொள்ளுமாறு கோருவது நியாயமானது. ஆனால் கடையடைப்பு செய்யுமாறு கோருவது முறையற்றது.

ஏற்கனவே இரண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள் நடைபெற்ற போது கடையடைப்போ, ஹர்த்தாலோ நடைபெறவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படாமல், குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள் அரசியல் வளர்க்க பொது மக்களை பயன்படுத்துவதை அனைவரும் நிறுத்தவேண்டும்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மக்களின் விருப்பத்தையும், கருத்துக்களையும் கணக்கிலெடுக்காமல் தனது தனிப்பட்ட விருப்பப்படி பொருத்தமற்ற இடத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் அமைத்தது வவுனியா மாவட்ட மக்களுக்கு செய்தமை பெரிய துரோகமாகும். அதேபோல் புதிய பேருந்து நிலைய மாற்றம் தொடர்பாகவும் வவுனியா மாவட்ட மக்களினதும் வர்த்தகர்களினதும் நலன்களை கருத்திற்கொள்ளாமல் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டமையானது வவுனியா மக்களுக்கு செய்த மிகப்பெரிய பாதிப்பான செயற்பாடாகும். ஆகையால் அவரது இணைத் தலைமையுடன் நடைபெறும் செயற்பாட்டிற்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்கமுடியவில்லை.

யுத்தம் நடைபெற்ற காலங்களிலும் ஏனைய காலங்களிலும் அனைவரினதும் வேண்டுகோள்களின் போதும் ஹர்த்தால் கடையடைப்பு கோரிக்கைகளுக்கு வவுனியா வர்த்தகர்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி வந்திருக்கின்றார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகையால் 16.09.2019 திங்கட்கிழமை அன்று நடைபெறும் ‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு கடையடைப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். — என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்