பலாலி கிழக்கு காணி விடுவிக்க இராணுவத்துக்கு மாற்று காணிகள்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (14) காலை ஆரம்பமானது.

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் வசமுள்ள தனியார் காணிகளை மீள கையளிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியின் இந்த துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கையின் கீழ் இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பலாலி கிழக்கிலுள்ள சுமார் 1800 குடும்பங்களின் காணிகள் மற்றும் மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள 431 குடும்பங்களின் காணிகள் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு வசமுள்ள ஏனைய காணிகள் தொடர்பிலும்; ஆராயப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பல முன்னேற்றமான விடயங்கள் இடம்பெற்றதுடன் இராணுவத்திற்கான மாற்றுக்காணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்த மாற்றுக்காணிகள் தொடர்பில் மூன்றுபேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருவாரங்களுக்குள் அடையாளங்காணப்படல்வேண்டும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கெரளவ ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க நடேஸ்வராக்கல்லூரியின் புகையிரதப்பாதை அருகே அமைந்துள்ள காணிகளும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடல்  மிகவும் சாதகமாக அமைந்ததுடன் இதற்கு மேலதிகமாக படைத்தரப்பு , பொலிஸ் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடி இது தொடர்பிலான அடுத்த கட்ட கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி இடம்பெறும் என்றும் கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,மாவட்ட அரசாங்க அதிபர் , வடமாகாண ஆளுநரின் செயலாளர் , யாழ் மாவட்ட முப்படைத்தளபதிகள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்