அதிரடி ஆட்டம் ஆரம்பம் அரச தலைவர் வேட்பாளராக கருவையே களமிறக்குங்கள்!

ரணிலிடம் பங்காளித் தலைவர்கள், நாடாளுமன்றத் குழுவினர், மத்திய செயற்குழுவினர்,

சர்வமதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்,

கல்விச் சமூகத்தினர் மற்றும் புத்திஜீவிகள் கோரிக்கை;

செவ்வாயன்று கூட்டமைப்பும் சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் அரச தலைவர் வேட்பாளராக (ஜனாதிபதி வேட்பாளர்) சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரியவைக் களமிறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னணியிலுள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களும், அதேபோல அரசியல் நிலைப்பாட்டில் ஏகோபித்த தீர்மானத்திலிருக்கும் சர்வமதத் தலைவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் இது தொடர்பில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளனர்.

நல்லாட்சி அரசின் முகாமில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள கருத்தாடல்கள் மற்றும் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டளவிலும் முன்னெடுக்கப்பட்ட இது தொடர்பான பேச்சுக்களின் பிரதிபலனாக இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை மற்றும் ஆசீர்வாதத்துக்கமைய தலைமைப் பிக்குகள் இன்று சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் நேரில் சந்தித்து சபாநாயகர் கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை நியமித்தால், அவருக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கான பகிரங்க நிகழ்வொன்றையும் தலைமைப் பிக்குகளின் வழிநடத்தலின் கீழ் நடத்தவும் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியையும் பிரதமரிடம் தலைமைப் பிக்குகள் வழங்கியுள்ளனர்.

இதனிடையே சிவில் செயற்பாட்டார்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக முன்நிறுத்துமாறு கோரவுள்ளனர். அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஆகியோரும் பிரதமரை நாளைமறுதினம் திங்கட்கிழமை சந்தித்து சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர்.

சுமார் 69 பேரைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் 42 பேரினதும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலுள்ள 48 பேரில் 30 பேரினதும் நம்பிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது காணப்படுகின்றது என அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.தே.கவின் நாடாளுமன்றக் குழு மற்றும் மத்திய செயற்குழுவிலுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் எனவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்பதோடு கட்சியின் தலைமைத்துவமும் அவரிடமே இருக்க வேண்டும் என்கின்ற சிந்தனையும் இவர்கள் மத்தியில் உறுதியாகக் காணப்படுகின்றது எனவும் அறியமுடிகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கின்ற குழப்பநிலை நீடித்தபோது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி தனக்கு வழங்க வேண்டும் என்பதை முன்நிறுத்தி கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்கம், சட்டம் மற்றும் சம்பிரதாயங்களை மீறி, கட்சிக்கும், கட்சித் தலைமைத்துவத்துக்கும் எதிராக உறுப்பினர்களைத் தூண்டிவிட்டு நாடளாவிய ரீதியில் மக்கள் கூட்டங்களை நடத்திய அவரது செயற்பாடு கட்சியின் நற்பெயருக்குப் பங்கம் ஏற்பட்டிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டுகின்ற அந்தக் குழுவினர், சஜித் பிரேமதாஸவின் இந்தப் பொறுப்பற்ற செயற்பாடு உள்ளிட்ட அவரது நடத்தை குறித்து கட்சித் தலைமைப்பீடம் கவனம் செலுத்த வேண்டும் என்கின்ற வலியுறுத்தலையும் விடுத்திருக்கின்றனர்.

இதனடிப்படையிலேயே நாடாளுமன்றக் குழுவினர் மற்றும் மத்திய செயற்குழுவைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தக் குழுவினர், கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும்படி கோரிக்கை முன்வைக்கவுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிக்கும்படியான கோரிக்கை ஒன்றும் கூட்டமைப்பினர் இதன்போது முன்வைக்கவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய நியமிக்கப்பட்டதன் பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து அவர் உத்தியோகபூர்வமாக விலகி அனைத்து இன, மத மற்றும் மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும் பொது வேட்பாளராக முன்வரவுள்ளார்.

அதற்கமைய தேர்தல் வெற்றியின் பின்னர் ஒரு வருடத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி, அதன் அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்துக்கு வழங்கி அதனூடாக அமரர் மாதுளுவாவே சோபித தேரரின் கனவை நனவாக்கவும் அவர் திட்டமிட்டிருக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்