விஜயகலா பற்றி மாவையிடம் ஐ.தே.க. உறுப்பினர் முறைப்பாடு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவிடம் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பற்றி, விஜயகலாவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் முறைப்பாடு தெரிவித்த சுவாரஷ்ய சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

வலி.வடக்கு பிரதேச சபையின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தவிசாளர் சுகிர்தனிடம், தமது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ.சேனாதிராசாவை சந்தித்து, வலி.வடக்கு மக்களின் பிரச்சினைகள், காணிவிடுவிப்பு என்பன தொடர்பில் உரையாட விரும்பினர். உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினருடன் நேரம் ஒதுக்கி, மேற்படி சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்தச் சந்திப்பிலேயே இந்த சுவாரஷ்ய சம்பவம் நடைபெற்றது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-

அண்மையில் வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பயனாளிகளுக்கு முத்திரை வழங்கும் நிகழ்வு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சமுர்த்திப் பயனாளிகளுக்கான முத்திரையை அமைச்சர் வழங்கிய பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பிரதேசசபை உறுப்பினர்களையும் வழங்குமாறு பணித்தார். அவர்களும் வழங்கினர்.

இந்த நேரத்தில் வலி.வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு பெண் பிரதேசசபை உறுப்பினரும் நிகழ்வில் கலந்துகொண்டார். அந்தப் பெண் பிரதேசசபை உறுப்பினரும் கூட்டமைப்பு, ஐ.தே.க. பிரதேசசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து தானும் மேடையில் ஏறிநின்று முத்திரை வழங்கும் நிகழ்வில் பங்குகொண்டார். அதன்போது, அவரை யார் என விசாரித்து அறிந்த விஜயகலா மகேஸ்வரன், அவரை அங்கிருந்து செல்லுமாறும், மேடையை விட்டு இறங்குமாறும் விரட்டினார். ஆனால், அந்த உறுப்பினர் செல்ல மறுத்து மேடையில் நின்றார். அவர் மீண்டும் மீண்டும் விரட்டினார்.

வலி.வடக்கு பிரதேசசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுடனான சந்திப்பில் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் பிரபாகரன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் செயற்பாடு ஒரு பிரதேசசபை உறுப்பினரின் சிறப்புரிமையை மீறி அவரை அகௌரவப்படுத்தும் செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவிடம் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா தன்னிடம் குறைப்பட்ட உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர் என்பதை உணர்ந்ததும், சிரித்துவிட்டு மௌனமாகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்