தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிப்போம்!!- சம்பந்தன் அழைப்பு

சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே எமக்கான தீர்வை வென்றெடுக்க நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும்.’

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அவர் மேலும் கூறுகையில்,

‘இலங்கையில் கடந்த வருடம் ஒக்டாபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியை ஜனநாயக வழியில் முறியடிக்க நாம் பெரிதும் உதவினோம். இதையடுத்து சர்வதேச சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்களும் எமக்குச் சார்பாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே, தமிழர்களாகிய எமது இலக்கை அடைய ஓரணியில் பயணிக்க வேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது.

எமது மக்களின் மனதை வெல்லும் வகையில் நாம் செயற்பட வேண்டும். அவர்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனினும், அந்த நம்பிக்கையை நாம் செயல் வடிவில் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ நடைபெற்றால் அதில் எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்கள் எமது கட்சியில் தெரிவானார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டும்’ – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்