உறுப்புரிமை நீக்கம் – சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம்.பௌசி, லக்ஷ்மன் யாப்பா மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தயாசிறி ஜயசேகர தொடர்பாக வெளிவந்துள்ள செய்திக்கு அமைவாக, அவர் நான் உள்ளிட்ட ஐவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

உண்மையில், எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது. கட்சியின் செயற்பாட்டிலிருந்து எம்மை தடை செய்ய முடியுமே ஒழிய உறுப்புரிமையை இல்லாது செய்ய முடியாது.

அதுவும் இந்த அதிகாரம் கட்சித் தலைவருக்கு மட்டுமே உள்ளது. மாறாக, இதற்கான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்கு கிடையாது. அவ்வாறு நீக்க வேண்டுமெனில், மத்திய செயற்குழுவின் அனுமதி அதற்கு அத்தியவசியமாக இருக்கிறது.

ஆனால், எமக்கு தெரிந்தவகையில் அன்மைக் காலமாக மத்தியக்குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில்கூட, எமது தரப்பு நியாயங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை.

நாம் எமது தன்னிலை விளக்கத்தை மட்டும்தான் இதுவரை குறிப்பிட்டுள்ளோம். எவ்வாறாயினும், மத்தியக் குழுக் கூட்டத்தில் மட்டும்தான் எமது உறுப்புரிமையை நீக்குவது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும்.

எனவே, தற்போது நாம் நீக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக நிச்சயமாக நாம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்