தேர்தல்கள் ஆணைக்குழுவின் மிக முக்கிய கலந்துரையாடல் குறித்த அறிவிப்பு வெளியானது!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அனைத்து மாவட்ட செயலாளர்கள், உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தெளிவூட்டுவதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோன்று நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரத்தின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல், தேர்தல் நடாத்துதல், தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு வலு சேர்க்கும் வகையில், தேர்தல் ஆணைக்குழுவுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்