2005இல் இழைத்த வரலாற்றுத் தவறை மீளவும் செய்யவேண்டாம் – வடக்கு, கிழக்கு தமிழரிடம் கோருகின்றார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எவரும் புறக்கணிக்கக்கூடாது. அனைத்து மக்களும் வாக்களித்தே ஆகவேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மக்களின் ஆதரவு இல்லாத சில அரசியல்வாதிகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் சிலர், இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று நாம் அறிந்தோம். முகவரியற்ற இந்த அரசியல்வாதிகளின் வேண்டுகோளைத் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இம்முறையும் விடக்கூடாது. அனைத்து மக்களும் வாக்களித்தே ஆகவேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரிய முரண்பாடுகள் இல்லை. ஐ.தே.கவின் வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தெரிவு செய்யும்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கும் வேட்பாளருக்கே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்