செம்மலை நீராவியடி பிள்ளையார்-குற்றவாளிகளிற்கு எதிராக ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

இரா. சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்
27.09.2019
அதிமேதகு மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு
ஜனாதிபதி செயலகம்
கொழும்பு -01

அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,
முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற சம்பவதினை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்
இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பின்வருமாறு,
1. முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலானது பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ஒரு புராதன கோவிலாகும்
2. இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் முற்றிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தினை சார்ந்தவர்கள்
3. யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஒரு பௌத்த துறவி இந்த நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியினை கைப்பற்ற முயற்சித்து அங்கே நிலைகொள்ள எத்தனித்தார்
4. குறித்த நிலத்தினை ஆக்கிரமிக்கும் பௌத்த துறவியின் முயற்சிக்கு தமிழ் இந்து மக்கள் தொடந்து தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியதோடு இது தொடர்பில் ஒரு முறுகல் நிலை தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது
5. குறித்த பௌத்த துறவி அண்மையில் கொழும்பில் காலமானார் அவரது பூதவுடலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இது வேண்டுமென்றே உணர்ச்சினைகளை தூண்டுவதற்காக செய்யப்பட்ட ஒரு செயலாகும்.
6. இந்த விடயம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, செப்டம்பர் 22 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை நீராவியடி பிள்ளையார் தேவஸ்தான பூமியில் தகனம் செய்வதற்கான தடை உத்தரவினை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

7. மேலதிக விசாரணைகளின் பின்னர் 23 செப்டம்பர் 2019 அன்று குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதனை தடை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, குறித்த இறுதிக் கிரிகைகள் அண்மையில் உள்ள பிறிதொரு காணியில் இடம்பெற வேண்டியதாயிருந்தது.
8. நீதிமன்ற கட்டளையை மீறி பிரேதம் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அண்டிய பகுதியில் தகனம் செய்யப்பட்டது. தீர்த்தக்கேணியில்தான் தெய்வத்தின் பல்வேறு தேவைக்காக புனித நீர் சேர்த்து வைக்கப்படுகின்றது. இச்செயலினால் ஆலயமும் அதன் பூமியும் தனது புனித தன்மையை இழந்துள்ளது. சைவ மக்கள் தங்களுடைய நெருக்கமான உறவினர் இறந்த பிறகு குறைந்தது 1 மாத காலம் வரையில் ஆலயத்தினுள்ளோ அதன் பூமிக்கோ செல்வதில்லை

9. நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்காக அவ்விடத்தில் பிரசன்னமாகி இருந்த போலீசார் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்தனர்.

10. இதன்பிரகாரம், பின்வரும் கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன்

(i) நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்கள் முறையாக கையாளப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
(ii) நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்துவதற்கு மாறாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு துணையாக இருந்து நீதிமன்ற தீர்ப்பினை நிறைவேற்ற தவறிய போலீசாருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அமைப்புகளின் இயலாமையை எடுத்துக்காட்டுவதுடன் நீதிமன்ற தீர்ப்பினை மதிக்காத நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரை சென்றுள்ளது.
இந்த விடயங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும்

மேலும் அண்மைகாலங்களில் குற்றவாளிகளிற்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படாத விதிவிலக்கு கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்றமையை நான் சுட்டிக்காட்ட வேண்டும்.. மனிதாபிமான மற்றும் மனித உரிமைகளுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களிற்கு எதிராக முறையான விசாரணைகளோ முறையான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தினை அவமதித்த நபருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தினை மீறி செயற்பட்ட நபரொருவருக்கு எவ்வித முறையான விசாரணைகளும் நடத்தாமல் அத்தகைய சட்ட மீறல்களிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயர் நிலை பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் மேலதிக விபரங்களை தற்போது குறிப்பிட விரும்பவில்லை நான் குறிப்பிடும் விடயங்கள் தொடர்பில் மேதகு ஜனாதிபதி அவர்கள் விளங்கிக்கொள்வீர்கள் என அறிவேன்.
நீராவியடி பிள்ளையார் ஆலய சம்பவம் தொடர்பில் முறையான சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறாத பட்சத்தில், தொடர்ந்தும் இத்தகைய விதிவிலக்கு கலாச்சார நிலைமை தொடர்வதனை ஊக்கப்படுத்துவதாக அமையும் அதேவேளை நாட்டுக்கும் எல்லா மக்களிற்கும் மிக பாரதூரமான விளைவுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தும்.
எனவே சட்ட ஒழுங்கினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற தீர்ப்பினை மீறிய நபர்களிற்கு எதிராக முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த விரும்புகிறேன்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள

இரா சம்பந்தன்
பாராளுமன்ற உறுப்பினர்
திருகோணமலை மாவட்டம்
தலைவர்- தமிழ் தேசிய கூட்டமைப்பு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்