கூட்டமைப்பிற்கும் சஜித்திற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமையினை கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பாக இது அமையவுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் கோரப்படலாம் என்று அதன் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாக அதன் ஊடகப்பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே கூட்டமைப்பு உறுப்பினர்களும் சஜித் தரப்பினரும் இரண்டு தடவைகள் யாழிலும், கொழும்பிலும் கலந்துரையாடிய போதும் ஆதரவு தொடர்பான எந்தவொரு உறுதி மொழிகளும் கூட்டமைப்பிடம் இருந்து சஜித்துக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்