இனப்பிரச்சினைக்கான தீர்வை சிங்களவர்களிடம் வெளிப்படையாகக் கூறுபவர்க்கே ஆதரவு – சிறிதரன்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான உரிய தீர்வுத் திட்டத்தை சிங்கள மக்களிடம் வெளிப்படையாகக் கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமது ஆதரவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இதுவரை எமது கட்சி தீர்மானிக்கவில்லை.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் விடயம் தொடர்பாக தீர்வை குறிப்பிடுபவர்களுக்கே ஆதரவு எனும் வகையில் கட்சியின் சார்பில் தலைவர் சம்பந்தன்,நேற்று கருத்து தெரிவித்தார்.

அந்த நிலைப்பாடே தற்போதும் எமது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு கதையும் தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு ஒரு கதையையும் கூறி நடந்துகொள்பவர்களை நாம் ஆதரிக்கப்போவதில்லை.

தமது நிலைப்பாட்டை உறுதியாக எடுத்து வெளிப்படையாக தெரிவிப்பவரையே ஆதரிப்போம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்