எந்த ஜனாதிபதியும் தீர்வைத் தரமாட்டார்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் கட்டளைக்கு சம்மந்தப்பட்ட பௌத்த மதகுருக்கள் கட்டுப்படவில்லை. நீதிமன்றத்தின் கட்டளையினை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றத்தின் கட்டளை வருவதற்கு முன்பாக வடபிராந்திய பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக கதைத்தேன். ஞானசார தேரர் அவர்கள் தன்னிச்சையாக ஒரு இடத்தில் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஆனால் நீதிமன்ற கட்டளை வருவதற்கு முன்னர் இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று என்னுடைய ஆதங்கத்தை வடபிராந்திய பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்திருந்தேன். எனினும் பொலிஸார் பௌத்த மதகுருக்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு விடயங்களிலும் நாட்டில் பௌத்த மதகுருக்களை அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்தை கட்டுப்படுத்த நீதிமன்றங்களினால் முடியாது என்கின்ற செய்தி வெளிப்படையாக புலப்படுகின்றது. பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக பொலிஸ் திணைக்களம் அல்லது எந்த விதமான திணைக்களமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கின்ற சூழ்நிலை வெளிப்படையாக தெரிகின்றது. நாங்கள் ஒரு விடயத்தை கருத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

வடக்கு- கிழக்கில் அல்லது இங்கிருக்கின்ற தமிழ் மக்களாக இருக்கலாம் அல்லது தமிழ் பேசுகின்ற மக்களாக இருக்கலாம் சிங்கள பேரினவாதிகள் அவர்களுடைய கொள்கைக்கு இனங்கிப்போனால் மாத்திரமே இலங்கையில் இருக்க முடியும் என்கின்ற ஒரு கருத்தை அவர்கள் இந்த செயற்பாட்டின் மூலம் வெளிப்படையாக சொல்கின்றார்கள்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த சிந்தனையை மீறி தமிழ் மக்களினுடைய கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு எந்த அரசாங்கங்களும் தயார் இல்லை. நீராவியடி பிள்ளையார் ஆலயம் தொடர்பான நீதிமன்றத்தின் கட்டளையினை பொலிஸார் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கின் அமைச்சராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருக்கின்றார் என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்