மலையகத்துக்கு தனிப் பல்கலை! – சஜித்திடம் 9 தலைப்புக்களின் கீழ் மனோ அணி கோரிக்கைகள் முன்வைப்பு

மலையகத்துக்கான தனிப்பல்கலைக்கழகம், கைத்தொழில் பேட்டை, அரச தொழில் வாய்ப்புகள் உட்பட 9 பிரதான தலைப்புகளின்கீழ் முக்கியமான பல கோரிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பிலுள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் வதிவிடத்தில் நடைபெற்றது.

மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியால் தயாரிக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையும் சஜித்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

* நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான தனி பல்கலைக்கழகம் அமைய வேண்டும்,

* தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டம் தொடர வேண்டும் என்பதுடன், ஆசிரியர்கள், வேலையில்லாதவர்கள், அரச ஊழியர்கள் ஆகியோரும் வீடமைப்பு திட்டத்துக்குள் உள்வாங்கப்படவேண்டும்.

* தோட்டப்புறங்களை அண்மித்துள்ள நகரங்களில் வாழும் மலையக மக்களுக்கும் வீடுகளை அமைப்பதற்கு நிலவுரிமையையும், கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

* கைத்தொழில் பேட்டைகள், ‘நைற்றா’ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் நிர்மாணிக்கப்படுதல் அவசியம்.

* ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்லாமல் அனைத்து அரச துறைகளுக்கும் மலையக இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதுடன், வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு அவசியம்.

* தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற்றாலும் உள்ளாட்சி மன்றம், மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கான இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.

என்பன உட்பட 9 தலைப்புகளின்கீழ் முக்கிய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு சாதகமான பதில்களை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, மலையக மக்களுக்காக எனது தந்தை செய்ததைவிடவும் பல சேவைகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார் என்று சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

கலாநிதி சந்திரபோஸ், பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் விஜேதந்திரன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோரன்ஸ், ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண். பிரபாகரன் உட்பட புத்திஜீவிகள் குழுவே குறித்த அறிக்கையை தயாரித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுவில் அதற்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்ருமான மனோ கணேசன், பிரதித் தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், பிரதி அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார்¸ வேலு குமார் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் நாயகம் சந்திரா ஸாப்ட்டர், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்காள சோ.சிறிதரன்¸ எம். உதயகுமார் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்