உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை இறுதிப்படுத்த இன்று கூடுகிறது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை இறுதிப்படுத்துவது தொடர்பில் ஆராய நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று வெள்ளிக்கிழமை கூடுகின்றது.

இம்மாதம் இரண்டாம் வார நாடாளுமன்ற அமர்வுகளின்போது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அதன் விசாரணைகளை முழுமைப்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளின் இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு அது தொடர்பில் ஆராய தெரிவுக்குழு அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடுகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடும் இந்தத் தெரிவுக்குழுவில் இறுதி அறிக்கையைத் தயாரிப்பது குறித்தும், இந்த மாதத்தில் கூடும் இரண்டாம் நாடாளுமன்ற வாரத்தில் ஒரு நாளில் தெரிவுக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்த்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே ஜனாதிபதி நியமித்த மூவர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும் தெரிவுக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையின் பரிந்துரைகள் குறித்தும் கவனம் செலுத்தி அறிக்கையை முழுமைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்