சு.கவின் ஆதரவு சஜித்துக்கா? கோட்டாவுக்கா! – சனியன்று தீர்வு கிடைக்கும் என்கிறார் அமரவீர

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியால் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணிக்கான பொதுச் சின்னம் குறித்தும் தீர்வு காணப்படும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதம் தொடர்பில் சனிக்கிழமை இடம்பெறவுள்ள சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியொன்றை அமைத்து களமிறங்குவது குறித்து சுதந்திரக் கட்சி பொதுஜன முன்னணியுடன் மாத்திரமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வேண்டுகோளுக்கு அமையவே அன்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

பொதுஜன முன்னணியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சனிக்கிழமை சு.கவின் மத்திய செயற்குழு கூடவிருப்பதால் அதற்கு முன்னர் சின்னம் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு தீர்வு காணப்பட்டால் பொதுஜன முன்னணியுடன் இணைந்து வெற்றிகரமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறில்லை என்றால் மாற்று வழி குறித்து சிந்திப்போம். எவ்வாறிருப்பினும் முடிந்த வரை வெற்றிகரமாக கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

சு.க. – பொதுஜன முன்னணி கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயமாக கோத்தபாய ராஜபக்ச  வெற்றி பெறுவார். அவர் ஜனாதிபதியானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மஹிந்த ராஜபக்ச  பிரதமராகத் தெரிவு செய்யப்படுவார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி சார்பில் தனது அரசியல் பயணத்தைத் தொடருவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் தேர்லில் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடாகும். அவரைக் களமிறக்குவது தொடர்பில் சுதந்திரக் கட்சி சார்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை. சுதந்திரக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரைக்  களமிறக்குவதென்றால் அதனைக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்தே போட்டியிடும். இந்தத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு எல்பிட்டி பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் மாவட்ட ரீதியிலான மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்