தமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்!

அதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்.

தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் இனிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. பின்னர் தனது முதல் இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 431 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அஸ்வின் 7 விக்கெட்டு்களை சாய்த்தார்.

பின்னர் இரண்டாவது இனிங்ஸை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 395 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.

பின்னர் 2வது இனிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ஓட்டங்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 3,தியூனிஸ் டி புருயின் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

அதாவது இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இன்றைய போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், அதிவேகமாக 350 விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் 66 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் அவர் முரளிதரனை முந்தி சாதனை படைப்பார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்